பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்; ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் உலக தரவரிசையில் 213வது இடத்தில் உள்ள இளம் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவுடன் நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்), அதிரடியாக விளையாடி 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர், கோர்டாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து 6-1 என வென்றார். மூன்றாவது செட்டிலும் நடாலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கோர்டா எளிதில் சரணடைய, நடால் 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 55 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்ச் ஓபனில் நடால் 12 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நேற்று களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 1-6, 2-6 என்ற நேர் செட்களில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கிடம் (19 வயது, 54வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடம் மட்டுமே நீடித்தது. இகா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மற்றொரு 4வது சுற்றில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (5வது ரேங்க்) 4-6, 4-6 என்ற நேர் செட்களில் மார்டினா டிரெவிசானிடம் (159வது ரேங்க்) போராடி தோற்றார்.

Related Stories: