ஜிஎஸ்டி. இழப்பீடு ஈடுசெய்யும் உத்தரவாதத்தை மீறிய மத்திய அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு இனியும் அமைதி காக்காமல் 42வது ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும் மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  ஆக்கபூர்வமாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, 5ம் தேதியன்று (இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42வது கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 41வது கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானபோது தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், அதை வலுவாக எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து நான்கு நாள் கழித்து 31ம் தேதி பிரதமருக்கு 4 பக்க கடிதம் எழுதியுள்ள முதல்வர் பழனிசாமியும் மாநிலங்களே கடன் வாங்கிக் கொள்வது நிர்வாக சிக்கல் கொண்டது. அது கடினம். ஆகவே அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையை பயன்படுத்தி ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடுசெய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் அருமையான வாய்ப்பை அதிமுக அரசு சென்ற கூட்டத்திலேயே கோட்டை விட்டுவிட்டது.

இதுபோன்ற நிலையில்தான் இப்போது 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி. இழப்பீட்டை ஈடுசெய்ய மாநிலங்கள் சந்தையில் கடன் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசு வழங்கிய இரு வாய்ப்புகள் குறித்தும் இழப்பீட்டை ஈடுசெய்யும் நிதிக்கான வரி வசூல் காலத்தை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து மாநிலங்களே சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை பல்வேறு மாநிலங்களும் எதிர்க்கின்றன. கடிதம் எழுதிவிட்டால் ஜிஎஸ்டி. வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு ஈடுசெய்து விடாது என்பதை முதல்வர் உணர வேண்டும்.

கொரோனா பேரிடரில் தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அரசியல் சட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் இதுவரை முதல்வர் பழனிசாமி தோல்வி கண்டு நிற்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது. ஆகவே இனியும் அமைதி காக்காமல் 42வது ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும் மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

* ‘திருப்பூர் குமரன் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்’

முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: உயிர் பிரியும் நிலையிலும் மூவண்ணக் கொடியை கீழே விடாது கையில் ஏந்தி வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கமிட்ட, கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம்; எல்லாவகை அடிமைத்தனத்தையும் எதிர்த்து உறுதியுடன் செயல்படுவோம் என கூறியுள்ளார்.

Related Stories: