மாஜி எம்பி, எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: பெரியகுளம் பண்ணை வீட்டுக்கு கட்சி நிர்வாகிகள் படையெடுப்பு

பெரியகுளம்: பெரியகுளம் பண்ணை வீட்டில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் அடுத்தடுத்து ஆதரவாளர்களை சந்தித்து வருவது மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது. நாளை மறுநாள் (அக். 7) முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் 3 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளார். அவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். அதேநேரம், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு மாவட்டம், காங்கேயம் முன்னாள் எம்எல்ஏ செல்வி, திருப்பூர் வடக்கு தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சந்திரசேகர், மற்றும் கனிஷ்கா சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பல்லடம் நகர் ஹவுசிங் தலைவர் பானு பழனிசாமி, வட்டச்செயலாளர் கருப்பசாமி, தாராபுரம் முன்னாள் சேர்மன் கோவிந்தராஜன், மடிப்பாக்கம் சுரேஷ்பாபு, திருப்பூர் தலைமை பேச்சாளர்கள் வேங்கை விஜயக்குமார், பாரதிப்ரியன், மீசை சுப்பிரமணியன், வினோத், பாஸ் என்ற பாஸ்கரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்சை சந்தித்தனர்.

 ‘நீங்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படவேண்டும். எங்களது கொங்கு மண்டலத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவு தர உள்ளோம்’ என இவர்கள் தெரிவித்ததாக கட்சியினர் கூறினர்.

இதனை தொடர்ந்து திருப்பூர் முன்னாள் எம்பி சிவசாமி, அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ மணிமேகலை ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, ராமநாதபுரம் மாவட்ட ஐ.டி விங்க் இணைச்செயலாளர்கள் அருள்முருகன், சோலைமுருகன், அம்மா சரவணன், வரதராஜன் என தொடர்ந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கிய நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடர்ச்சியாக ஓபிஎஸ்சை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களின் துணையுடன் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை தொடங்குவாரா அல்லது எடப்பாடியுடன் சமரசமாக செல்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் தீவிரமாக எழுந்துள்ளது. இதனிடையே, இன்று காலை தேனி மாவட்டம் நாகலாபுரத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்ள உள்ளார். தற்போதைக்கு சென்னை செல்லமாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* ஓபிஎஸ்சுக்கு சாத்தூர் எம்எல்ஏ ஆதரவு?

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை அமைப்பது தொடர்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருமங்கலம் திரும்பிய அமைச்சர் உதயகுமாரை பயணியர் விடுதியில் சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இவருடன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேல்ராணி வெங்கடேசன், ஜெ. பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இவர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘இது சாதாரண சந்திப்புதான், திருமங்கலம் தொகுதியில் நடைபெறும் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிபோல் சாத்தூர் தொகுதியில் நடத்த எம்எல்ஏ முடிவு செய்துள்ளார்’’ என்றார். இதை தொடர்ந்து அமைச்சரும், எம்எல்ஏவும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். ஓபிஎஸ்சை அமைச்சர் உதயகுமார் சந்தித்து திரும்பிய உடன், சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் வந்து அவரை சந்தித்தது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எடப்பாடியின் ஆதரவாளராக கருதப்படும் நிலையில், எம்எல்ஏ ராஜவர்மன் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

* மூக்கையா தேவருக்கு சிலை உசிலம்பட்டியில் ஓபிஎஸ் ஆய்வு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகில், ரூ.17 லட்சத்தில் மூக்கையா தேவருக்கு, வெண்கல சிலை நிறுவப்படவுள்ளது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சிலை நிறுவப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அமைச்சர் உதயகுமார், தேனி எம்பி ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி ஆகியோர் உடனிருந்தனர். நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, சிரித்தபடியே வாங்க டீ சாப்பிடுவோம் எனக்கூறி தேவர் சிலை எதிரே உள்ள டீக்கடைக்கு சென்று டீ சாப்பிட்டார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், தேனிக்கு புறப்பட்டுச் சென்றார். நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: