உலகில் யாரும் என்னைத் தடுக்க முடியாது: ராகுல் காந்தி தலைமையில் காங்.எம்.பி.க்கள் அடங்கிய குழு இன்று மதியம் ஹத்ராஸ் பயணம்..!!!

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசை சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால்  பாலியல் பலாத்காரம் செய்து  கடுமையாக தாக்கப்பட்டார். இவர்  சிகிச்சை பலனின்றி இறந்தது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக  காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா  காந்தியும் நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து ஹத்ராசுக்கு காரில் கிளம்பினர்.  ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களின்  வாகனங்களை நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் உத்தர பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், கார்களில்  இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா காந்தியும், ‘நாங்கள் நடந்தே செல்கிறோம்’ என்று கூறி, ஹத்ராசை நோக்கி நடந்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது நடந்த   தள்ளுமுள்ளுவில், ராகுலை போலீசார் கீழே தள்ளி விட்டனர். பின்னர், ராகுல், பிரியங்காவை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். தொடந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், தடையை மீறிய ராகுல், பிரியங்கா காந்தி உட்பட 200 பேர் மீது உபி போலீசார் நேற்று 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் மீண்டும் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே உத்திரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ராகுல் காந்தி செல்கிறார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை அரசு கையாண்ட விதத்தை ஏற்க முடியாது. உத்திரப்பிரதேச அரசு,  அதிகாரிகள் கையாண்ட விதத்தை நான் ஏற்கமாட்டேன்; நான் மட்டுமல்ல எந்த இந்தியரும் ஏற்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.  ஹத்ராஸின் இந்த மகிழ்ச்சியற்ற குடும்பத்தை சந்திப்பதிலிருந்தும், அவர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் உலகில் எதுவும் என்னைத் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: