ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர  தலைவர் ஜெ.பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், முருகன், ரியாஸ் வட்டார தலைவர் கே.பால் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  சி.ஆர்.பெருமாள், எஸ்.புத்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர்,  உத்தரபிரதேச முதல்வர்  யோகி ஆதித்யாவின் உருவபொம்மையை எரித்து, செங்கல்பட்டு-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து  செங்கல்பட்டு டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர்  இராம.நீராளன் முன்னிலை வகித்தார். முன்னதாக காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பேரணியாக சென்ற காங்கிரஸ்  கட்சியினர் தேரடி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற  ராகுல்காந்தியை அவமானபடுத்தியும், கீழே தள்ளியும் கைது செய்த உபி பாஜ அரசு மற்றும் அதற்கு துணையாக இருந்த மத்திய அரசை கண்டித்து  கோஷமிட்டனர்.

மாவட்ட பொது செயலாளர் லோகநாதன், நிர்வாகிகள் பிரபாகரன், பச்சையப்பன், குமார், ரவி, மோகன், நகர நிர்வாகிகள் கருணாமூர்த்தி உள்பட பலர்  கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் காங்கிரஸ் மாநில குழு உறுப்பினர் அளவூர் நாகராஜன் தலைமையில் உத்தரபிரதேச  அரசை கண்டித்து அருண், நாதன், அன்பு,செல்வம், சேரன் உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் காங்கிரஸ் சார்பில்  ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து முன்னாள் வட்டார தலைவர் பாலுசாமி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் மனித உரிமைத் துறை மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: