தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பி.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

பள்ளிப்பட்டு: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரி, பி.டி.ஓ அலுவலகத்தை பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரிய நகபூண்டி ஊராட்சியில்  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட கிராம தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், பணிதள பொறுப்பாளர், தொழிலாளர்கள் பதிவேடு ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்காமல் வைத்திருப்பதால், தொழிலாளர்களுக்கு இரண்டு வாரங்களாக  வேலையின்றி அவதிப்பட்டு வந்தனர்.  

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள்   200க்கும் மேற்பட்டோர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், கலைச்செல்வி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கோ.பார்த்திபன்  ஆகியோர் கூலிதொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திடம் 100 நாள் வேலை திட்ட பதிவேடுகள் வழங்கி பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதியை ஏற்று சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால்ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: