அதிமுக செயற்குழு பிரச்னையை வெளியில் சொல்லக்கூடாது சீனியர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க `அட்வைஸ்’

சென்னை: அதிமுக செயற்குழுவில் கருத்து பரிமாற்றம் இருக்கலாம். அதை வெளியில் கருத்து சொல்வது  என்பது ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வருவார் என கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனை நான் ரொம்ப மதிக்கிறேன். அவருக்கு கட்சியின் கட்டுப்பாடு நன்றாக தெரியும். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இதுபற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என்று சொன்னார்கள். செயற்குழுவில் முதல்வர் வேட்பாளரை வரும் 7ம் தேதி அறிவிப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. செயற்குழுவில் கருத்து பரிமாற்றம் இருக்கலாம். வெளியில் கருத்து சொல்வது என்பது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. ஒற்றுமையோடு வாழ்ந்தால் நன்மை உண்டு.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய இல்லத்தில் ஆலோசனை நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். எனவே அதில் அரசியல் சாயம் பூச வேண்டாம். கட்சியில் பிரச்னை இருக்கிறது என்று சொல்லக்கூடாது. அதிமுக நிர்வாகிகளிடையே சண்டையே இல்லை. சண்டை நடந்தால் தானே சமாதானம். எதிரிகள், துரோகிகள் எதிர்பார்ப்பது போல அதிமுகவில் எந்த பிரச்னையும் ஏற்படாது, இது உறுதி. வட வியட்நாம், தென் வியட்நாம் என்றெல்லாம் கிடையாது. ஒரே வியட்நாம் தான்.

* இனி வாயை திறக்க மாட்டேன்: திண்டுக்கல் சீனிவாசன் ‘கப்சிப்’

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சிறுவாட்டுக்காடு பகுதியில் மின்திட்ட பணிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேட்டியளித்த ‘‘அவரிடம் நிருபர்கள், ‘முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறியுள்ளீர்களே’ என கேட்டபோது, ‘‘கட்சியில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கண்டனம் நியாயமானதுதான். கட்சி கட்டுப்பாடும் சரியானதுதான். நான் மூத்த உறுப்பினர். எனக்கும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்பதால்தான் நான் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது. இனிமேல் நான் வாயை திறக்கப் போவதில்லை’’ என்றார்.

Related Stories: