முதல்வர் வேட்பாளர் யார்? 4 சுவருக்குள் தலைமை முடிவு எடுக்கும்: அமைச்சர் ஓ.எஸ் மணியன் தகவல்

நாகை: ‘பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்வது என்பது சகஜமானது. எனினும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் நான்கு சுவர்களுக்குள் முடிவு எடுக்கும்’   என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில், அதிமுக கட்சி அலுவலகத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

32 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்ட கட்சியே, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்ற சரித்திரத்தை அதிமுக படைத்து காட்டியுள்ளது. மேலும் 234 தொகுதியிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இதைவிட அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதற்கு வேறு சான்று வேண்டுமா?.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்வது என்பது சகஜமானது. அதிலும் ஒரு மூத்த அமைச்சர் வீட்டில் நடக்கும் கூட்டத்தில் மற்ற அமைச்சர்கள் கலந்து கொள்வது வழக்கமானதுதான்.  தற்போது அதிமுக இரட்டை தலைமையோடு செயல்படுகிறது. இனி வரும் காலங்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் நான்கு சுவர்களுக்குள் முடிவு எடுக்கும். மற்றவர்கள் நினைப்பது போல் அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் சீனிவாசன்: திண்டுக்கல்லில் நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான். அடுத்த முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்றார்.

அறிவிக்க வாய்ப்பே இல்லை சொல்கிறார் பாஜ துணைத்தலைவர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பாஜ மேற்கு மாவட்டம், சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ``அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்.7ம் தேதி அறிவிக்க வாய்ப்பில்லை. அது மேலும் தள்ளிப்போகும். அதிமுகவில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் தமிழகத்தில் பாஜ - அதிமுக கூட்டணி தொடரும். மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்பதை வரவேற்கிறேன் என்றார்.

Related Stories: