பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நான் குற்றவாளி என்றால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயார் : பாஜ மூத்த தலைவர் உமாபாரதி கடிதம்!!

டேராடூன்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜ மூத்த தலைவர் உமாபாரதி, தான் குற்றவாளி என்றால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயார் என்று தெரிவித்துள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும், அன்று குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் சம்மந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதை முன்னரே உணந்த முன்னால் மத்திய அமைச்சர் உமாபாரதி, 26.9.2020 அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘’பாபர் மசூதி வழக்கில் நான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், எக்காரணத்தைக்கொண்டும் ஜாமீன் கேட்க மாட்டேன். வரப்போகும் தீர்ப்பை அடிப்படையாக வைத்துதான் எனக்கு பாஜகவில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அதனால் என்ன தீர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும். அதைப்பற்றி கவலைப்படவில்லை. அயோத்தி கரசேவை இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்’’என்று கூறியிருக்கிறார்..

Related Stories: