அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாய் பணியாற்ற வேண்டும் இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும்: செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* மத்திய அரசு கொரோனா நிவாரணத்திற்கு போதுமான நிதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும்.

* ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.12,258.94 கோடி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் உள்பட மொத்த நிலுவைத்தொகை ரூ.23,783.36 கோடி உடனடியாக வழங்க வேண்டும்.

* தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழி கொள்கையே என்றென்றைக்கும் அதிமுக மொழி கொள்கை. இதில் அதிமுக உறுதியாய் இருக்கும்.

* நீட்’ என்ற மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதி தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது. மத்திய அரசு தமிழக அரசின் வாதங்களை புரிந்து, ஏற்றுக்கொண்டு `நீட்’ தேர்வு முறையைக் கைவிட வேண்டும்.

* பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

* மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தலா ரூ.10.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

*  இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தென் மாநிலங்களை சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த அறிஞர்களுக்கு மத்திய அரசு இடம் அளிக்க வேண்டும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய 1860ம் ஆண்டைய இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கிட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருக்கும் முதல்வருக்கு பாராட்டுக்கள்.

* காவிரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ₹14 ஆயிரம் கோடி செலவில்  பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வருக்கு பாராட்டுக்கள்.  

* காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு அதிமுக செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

* தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் நன்றி.

* அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய் பணியாற்றி, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் என்று சூளுரை ஏற்க வேண்டும்.

Related Stories:

>