பீகார் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 30 ஆயிரம் போலீஸ்

புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, இங்குள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7ம் தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த 25ம் தேதி வெளியிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்களின் பாதுகாப்பு கருதி 7 லட்சம் சானிடைசர், 46 லட்சம் முகக்கவசங்கள், 6 லட்சம் கவச உடைகள், 23 லட்சம் கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 300 கம்பெனி துணை ராணுவத்தினரை அனுப்ப உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய ஆயுத போலீஸ் படை (சிஆர்பிஎப்) 80, சாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) 70, எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) 55, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) 50, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை (ஐடிபிபி) ஆயுதப்படை போலீஸ் (ஆர்பிஎப்) 15, என ஒவ்வொரு படைப்பிரிவில் இருந்தும் கம்பெனிக்கு 100 பேர் வீதம், மொத்தம்  30 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட உள்ளனர்.

* ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த மாஜி டிஜிபி

அரசியலில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பீகார் மாநில டிஜிபி.யாக இருந்த குப்தேஷ்வர் பாண்டே, கடந்த 22ம் தேதி திடீரென விருப்ப பணி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் நேற்று முன்தினம் முதல்வர் நிதிஷ் குமாரை ஐக்கிய ஜனதா தள கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்தார். இது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்,’ எனறு மட்டும் பாண்டே தெரிவித்தார். இந்நிலையில், நேற்று அவர் நிதிஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் முறைப்படி இணைந்தார்.

Related Stories: