வேளாண் மசோதாவுக்கு ஆதரவு விவசாயிகளுக்கு செய்த துரோகம்: தமிழக அரசு மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: ‘’வேளாண் மசோதாவுக்கு ஆதரவு அளித்து, விவசாயிகளுக்கு தமிழக அரசு மாபெரும் துரோகம் செய்துள்ளது’’ என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அது வருமாறு: மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 3 மசோதாக்களை கொண்டு வந்து, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசின் இந்த 3 வேளாண் மசோதாக்கள் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர் ஒருவர் இந்த மசோதாவை எதிர்த்து தன் பதவியையே தூக்கி எறியும்போது, விவசாயி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் முதல்வர் பழனிச்சாமி இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா? வறுமையில் விவசாயம் செய்ய வழியில்லாமல், கடனால் அன்றாடம் இறந்துகொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் மேலும் சுமை கூடும். ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் என்று, ஏற்கனவே இருக்கும் திட்ட முனைப்புகள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த தமிழக அரசு, விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் இந்த புது சட்டத்துக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறது அதிமுக அரசு.

எனவே, தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நம் விவசாயிகள் நலன் காக்க ஜனாதிபதி இந்த சட்டங்களை பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், இந்த சட்டங்கள் நன்மை பயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட இதுவே வழிமுறை. தவறும்பட்சத்தில், விதைக்கும் மக்களுக்கு தங்கள் ஆட்சியை புதைக்கவும் வலிமை உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: