பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: இபிஎஸ்-ஓபிஎஸ் பலப்பரீட்சை ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு இன்று காலை கூடுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக இபிஎஸ்- ஓபிஎஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு பேரின் ஆதரவாளர்கள் திரள்வதால் போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டது. தொடர்ந்து இரண்டு அணியினரும் ஒன்றிணைந்தனர். ஓ.பி.எஸ்.க்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இரண்டு அணியினரும் ஒன்றிணைந்த பின்னரும் கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் அணி என்றே செயல்பட்டு வந்தனர். இபிஎஸ் கை தான் கட்சியிலும், ஆட்சியிலும் ஓங்கி இருந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இது ஓபிஎஸ்க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் களத்தில் குதித்தனர். இதையடுத்து அதிமுகவுக்குள் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டியளிக்கும்போது எல்லாம் கூறி வந்தனர். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இரண்டு அணியினரும் தங்களுக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. அதைத் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று ஓ.பி.எஸ்., இபிஎஸ் கூட்டறிக்கை மூலம் எச்சரித்தனர். இதனால், அந்த நேரத்தில் இந்த பிரச்னை ஓய்ந்தது.

ஆனால், இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொரோனா பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது அவர்கள் கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.  அப்போது அவர் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். ஓ.பி.எஸ்.சும் தனது தரப்பிற்கு எடப்பாடி ஆதரவாளர்களை வளைக்கும் பணியில் ஈடுபட்டார். நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர். என்னை வேட்பாளராக அறிவிக்க செய்யுங்கள் என்றும் நிர்வாகிகளிடம் பேசி வந்தார். இரண்டு பேரும் பலத்தை நிரூபிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கினர்.

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொது செயலாளராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியானது. இதற்கு இருவரும் சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் இதை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது.  இரண்டு பேரும் கட்சியிலும், ஆட்சியிலும் ஒருவர் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததால் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இபிஎஸ் ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசினர்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கவும் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தவும் கோரினர்.உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருங்கிய தொழில் அதிபர்களை சந்தித்தும் பேசினர். நேற்று முன்தினம் இருவரும் சென்னை திரும்பி எடப்பாடியை சந்தித்து பேசினர். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இது ஓ.பி.எஸ்.க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர், அதிமுக பொதுச்செயலாளர், சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் இபி.எஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர். இதில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் இரண்டு தரப்பிலும் பிரச்னை ஏற்பட வாய்புள்ளது. பிரச்னையை சமாளிக்க ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதனால், பொதுக்குழு கூடும் தேதியும் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழுவில் அறிவிக்கப்படலாம்?. அது மட்டுமல்லாமல் செயற்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. என்ன முடிவை எடுக்க போகிறார்கள் என்ற அதிமுக தொண்டர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

    

* இபி.எஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர்.

* முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் இரு தரப்பிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

* ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>