ரிங்ரோடு விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

ஈரோடு: ரிங்ரோட்டிற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பெருந்துறை சாலை, சென்னிமலை, மொடக்குறிச்சி, பூந்துறை ரோடு ஆகியவற்றை இணைத்து நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையுடன் இணைக்கும் வகையில் ரிங்ரோடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் ஒரு சில விவசாயிகள் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தடைபட்டிருந்த ரிங்ரோடு பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட போது, இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை நீதிமன்றத்தில் வைப்பாக செலுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நில உடமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு தற்போது பணிகள் நடக்கிறது. பெருந்துறை சாலை சந்திப்பு அருகில் புத்தூர்புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள சில நில உடமையாளர்களுக்கான இழப்பீட்டு தொகை பெற இறுதி தீர்வும் பிறக்கப்பட்டு, வருவாய்துறை மூலம் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வராததால், இழப்பீட்டு தொகை வருவாய்துறையின் மூலம் நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரிங்ரோடு அமைக்கும் பணி அப்பகுதியில் நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: