ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதொழில்கள் வரிசையில் கொரோனா ஊரடங்கால் நசுங்கிய அலுமினிய பாத்திர உற்பத்தி: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் நசுங்கிய அலுமினிய பாத்திர தொழிலாளிகள் அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் இயந்திரங்களை போல் இயங்கி கொண்டிருந்த மனித இனத்தை கொரோனா என்னும் ஒற்றை வைரஸ் வீடுகளில் முடக்கி விட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் தொழில் துறை முடங்கி போனது.

இந்தியாவில் 5 கட்டங்களாக விதிக்கப்பட்ட தற்போது, பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முடங்கி போன தொழிற்சாலை மீண்டும் பழைய நிலைக்கும் வர இன்னும் சில மாதங்களுக்கு மேலாகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அலுமினிய பாத்திரங்கள் தயாரிப்பு தொழில் நசுங்கி வரும் நிலையில் உள்ளது.

நாகரிகம் துவங்கி மனிதர்கள் சமைத்து சாப்பிட ஆரம்பித்த காலத்தில் சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறிவருகிறது. மண் பாண்டத்துக்கு மாற்றாக அலுமினிய பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.  

நவீன உபகரணங்கள் வந்தாலும் அலுமினிய பாத்திரத்தின் தேவை அதிகரிப்பால், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. சமையல் செய்வதற்கு நவீன உபகரணங்கள் வந்தாலும், அலுமினிய பாத்திரங்களுக்கு இன்று பொதுமக்களிடம் மவுசு குறையவில்லை. இதனால் அலுமினிய பாத்திரங்கள் தயாரிப்பில் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். கொரோனா ஊரடங்கால் அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் நசுங்கி உள்ளது. இதனால் அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் சிறு தொழில் வியாபாரிகள் உள்ளனர். இதில் அம்மூர்- வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகே உள்ள அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலையின் உரிமையாளர் குட்டி கூறியதாவது: குடியாத்தத்தில் எங்களது குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்தோம். பின்னர், சிறிய அலுமினிய ஷீட்டுகள் எடுத்து வந்து அலுமினிய பாத்திரங்களை செய்து வந்தோம். இதையடுத்து, கடந்த 2000ம் ஆண்டில் அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிலை அம்மூர் பஜாரில் துவக்கினோம். தொடர்ந்து, சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை 500 முதல் 600 கிலோ வரை அலுமினிய சீட்டுகள் கொண்டு வந்து, அன்ன கூடைகள், கிளாஸ்கள், கிண்ணங்கள், பூஜை பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்தில் உள்ள எனது அப்பா, மனைவி, மகன் உட்பட 10 பேர் ஈடுபட்டு வருகிறோம்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 1ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டும் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சரியான ஆர்டர்கள் கிடைக்காததால் உணவிற்காக மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேலும், எங்களை போல் அம்மூரில் 2 தொழிற்சாலைகளும், கல்மேல்குப்பம் கிராமத்தில் 2 சிறு தொழிற்சாலைகள் என 4க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள எங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜிஎஸ்டி வரியால் பெரும் இழப்பு

அலுமினிய பொருட்கள் தயாரிப்புக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி 12 சதவீதம் முதல் 18 சதவீதம் பிடித்தம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது அலுமினிய உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

கிமு 5300 ஆண்டுக்கு முன்னரே அலுமினியம்

அறிவியல் வளர்ச்சி அடையாத பண்டைய காலத்திலேயே அக்கால மக்கள் அலுமினியத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அலுமினியம் ஓர் உலோகம் என்பதையும் அதன் பலன்கள் தன்மை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை கிமு 5300ம் ஆண்டுக்கு முன்னரே மத்திய கிழக்கில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருந்தன. அலுமினியத்தை கிரேக்கர்களும், ரோமானியர்களும் வயிற்று போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும் சாயப்பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர். இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.

இந்தியாவில் 1943ம் ஆண்டு அலுமினிய உற்பத்தி

உலகில் அதிகம் கிடைக்கக்கூடிய தனிமங்களில் அலுமினியம் 3வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பாக்சைட் அதிகமாக கிடைக்கிறது. இந்தியாவில் 1943ம் ஆண்டு அலுமினிய உற்பத்தி தொடங்கப்பட்டது.

Related Stories: