குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வது அவசியம் காப்பக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புங்கள்: தமிழகம் உட்பட 8 மாநிலங்களுக்கு உத்தரவு

* நாட்டில் 9,589 குழந்தைகள் காப்பகம் உள்ளன.

* இவற்றில் 2.56 லட்சம் குழந்தைகள் தங்கியுள்ளனர்.

* இதில், அதிகபட்சமாக தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் மட்டுமே 1.84 லட்சம் குழந்தைகள் தங்கியுள்ளனர்.

புதுடெல்லி: ‘காப்பகத்தில் உள்ள குழந்தைகளை 100 நாட்களில் அவர்களின் குடும்பத்திடம்  ஒப்படைக்க வேண்டும்,’ என தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மிசோரம், மேகாலயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் உள்ளனர். இது நாடு முழுவதும் காப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளின் மொத்தம் எண்ணிக்கையான 2.56 லட்சத்தில், 72 சதவீதமாகும். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில், குடும்ப சூழலில் குழந்தைகள் வளர வேண்டியது அவசியம் என்பதால், காப்பகத்தில்  உள்ள குழந்தைகளை, அதிகபட்சம் 100 நாட்களுக்குள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப முடியாத குழந்தைகளை தத்து எடுப்பதற்கோ அல்லது வளர்ப்பு இல்லங்களுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்த 8  மாநிலங்களுக்கும் என்சிபிசிஆர் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழலில், காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அது விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக என்சிபிசிஆர் தலைவர் பிரியான்க் கானூன்கோ கூறுகையில், சிறார் நீதி சட்டத்தின்படி, குழந்தைகள் குடும்பத்துடன் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில், அவர்களுக்கு வீடு போன்ற உணர்வை தருவதற்காகதான் காப்பகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளை வீட்டிற்கு அனுப்புவது 8 மாநிலங்களிலும் ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை என்சிபிசிஆர் கண்காணித்து வரும்,’’ என்றார்.

Related Stories: