சென்னை: சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுவில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், புகார் மீது எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் எனவே அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
