அரசு உத்தரவை மீறி மணல் கொள்ளையில் ஈடுபடும் டிராக்டர்களை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அதிரடி

சித்தூர் : சித்தூர் அருகே அரசு உத்தரவை மீறி மணல் கொள்ளையில் ஈடுபடும் டிராக்டர்களை வழிமறித்து கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டம், சத்தியவேடு மண்டலம்  ஐயா காரி பள்ளி அருகே நீவா நதி அரசு உத்தரவை மீறி 10 மீட்டர் ஆழம் வரை ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆற்றில் மணல் கொள்ளையில் நேற்று ஈடுபட்ட டிராக்டர்களை அப்பகுதி மக்கள் வழிமறித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `மாநில அரசு  ஆற்று மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, வீடு கட்ட மணல் தேவைப்படும் நபர்கள்  அந்தந்த பகுதியில் உள்ள இ சேவையில் மணல் அள்ளுவதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி அனுமதி பெற்று மணலை எடுத்து செல்ல வேண்டும்.

அதேபோல், ஆற்றில் மணல் அள்ளும்போது  கூலி  தொழிலாளர்களை வைத்து  டிராக்டரில் மணல்  அள்ள வேண்டும். மேலும், 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஆனால், சில சமூக விரோதிகள் அரசு உத்தரவை மீறி ஜேசிபி இயந்திரம் கொண்டு 10 மீட்டர் ஆழம் வரை மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மணலை அள்ளி டிராக்டர்களில்  தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இரவோடு இரவாக  மணலை கடத்தி  செல்கின்றனர்.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, ஆற்றில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது வேதனை தருகிறது. மேலும், சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் பலமுறை அதிகாரிகளிடம் மணல் அள்ள தடை விதிக்கக்கோரி தெரிவித்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நாங்கள் ஒன்றுக்கூடி மணல் அள்ளிச்செல்லும் டிராக்டர்களை இன்று(நேற்ற) வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: