புதுச்சேரி வீட்டில் பதுக்கிய 74 சாமி சிலைகள் பறிமுதல்: தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி வீட்டில் பதுக்கிய பல கோடி ரூபாய் மதிப்பு 74 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சாமி சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கடந்த 2016ல் போலீசார் கைது செய்தனர். தீனதயாளன் கொடுத்த தகவலின்பேரில், புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக்கூடம் நடத்தும் புஷ்பராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தி உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ₹50 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் வனினாஆனந்தி (39) என்பவரை கைது செய்தனர்.

இந்தநிலையில், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள பால்ராஜரத்தினம் என்பவரது வீட்டில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் 60 ஐம்பொன் சிலைகள், 14 கற்சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து 74 சிலைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. வீட்டின் உரிமையாளர் பால்ராஜரத்தினம் ஏற்கனவே, கைதான வனினாஆனந்தியின் சகோதரர் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு சென்னைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: