ரோகித் சர்மா அதிரடியில் எளிதாக வென்றது மும்பை

அபுதாபி: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 49 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது. அதிரடியாக ஆடிய மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா 54 பந்தில் 80 ரன் விளாசினார். ஷேக் ஜாயேத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக டி காக், கேப்டன் ரோகித் களமிறங்கினர். டி காக் 1 ரன் மட்டுமே எடுத்து மாவி பந்துவீச்சில் நிகில் நாயக்கிடம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். ஒரு முனையில் சூரியகுமார் பவுண்டரியாக விளாசித் தள்ள, மறுமுனையில் ரோகித் இமாலய சிக்சர்களைத் தூக்கி அசத்த மும்பை ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது. அரை சதத்தை நெருங்கிய நிலையில், சூரியகுமார் துரதிர்ஷ்டமாக ரன் அவுட்டானார். அவர் 28 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து ரோகித் - திவாரி ஜோடி பொறுப்புடன் விளையாடி 49 ரன் சேர்த்தது. திவாரி 21 ரன் எடுத்து சுனில் நரைன் சுழலில் வெளியேற, ரோகித் 80 ரன் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மாவி பந்துவீச்சில் கம்மின்ஸ் வசம் பிடிபட்டார். ஹர்திக் பாண்டியா 18 ரன் எடுத்து ரஸ்ஸல் வேகத்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. போலார்டு 13 ரன், குருணல் பாண்டியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் ஷிவம் மாவி 2, நரைன், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது.

ஷுப்மான் கில், சுனில் நரைன் இருவரும் துரத்தலை தொடங்கினர். போல்ட் வேகத்தில் சுப்மன் கில்லும் (7), பேட்டின்சன் வேகத்தில் நரைனும் (9) ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக், ராணா ஜோடி ஓரளவுக்கு தாக்குபிடித்தாலும், அதிக நேரம் நீடிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் (30) சாகர் பந்திலும் ராணா (24) போலார்ட் பந்திலும் ஆட்டமிழந்தனர். முக்கியமான கட்டத்தில் கொல்கத்தா அணி அதிகம் நம்பியிருந்த மோர்கன் (16), ரஸ்ஸல் (11) இருவரையும் பும்ரா வெளியேற்ற, கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது. பின்வரிசையில் கம்மின்ஸ் மட்டும் அதிரடியாக 12 பந்தில் 33 ரன் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. மும்பை தரப்பில் போல்ட், பேட்டின்சன், பும்ரா, சாஹர் தலா 2 விக்கெட்டும், போலர்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ரோகித் 200

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று அரை டஜன் சிக்சர்களை விளாசிய ரோகித், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். கிறிஸ் கேல் (326 சிக்சர்), டி வில்லியர்ஸ் (214) தோனி (212) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

சிக்சர் மழையில் சாதனை சமன்

ராஜஸ்தான் - சிஎஸ்கே மோதிய போட்டியில் பெய்த சிக்சர் மழை, முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 4 சிக்சர், சஞ்சு சாம்சன் 9 சிக்சர், ஆர்ச்சர் 4 சிக்சர் விளாச, ராஜஸ்தான் இன்னிங்சில் மொத்தம் 17 சிக்சர்கள் பறக்கவிடப்பட்டன. சென்னை அணி சார்பில் டு பிளெஸ்ஸி 7, கேப்டன் தோனி 3, வாட்சன் 4, சாம் கரன் 2 என மொத்தம் 16 சிக்சர்கள் விளாசப்பட்டன. இரு அணிகளும் சேர்ந்து 33 சிக்சர்கள்  அடித்தது, ஐபிஎல் தொடரின் முந்தைய சாதனையை சமன் செய்தது. 2014ம் ஆண்டு  பெங்களூர்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 சிக்சர்கள் விளாசப்பட்டதே முந்தைய சாதனையாகும். சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 31 சிக்சர்கள் பறந்தது, இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Related Stories: