கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்: முதல்வர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனா பரவல் உள்ள சிறிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நோயை கட்டுப்படுத்துவது பற்றி இம்மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று, காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

அதில், அவர் பேசியதாவது: கொரோனா பாதித்துள்ள சிறிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். அதே நேரம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். முறையான பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலமும் நோயை தடுக்கலாம். கொரோனா பாதித்த பெரும்பாலானவர்கள் அறிகுறி இல்லாதவர்களாக இருப்பதால், பரிசோதனை முறை தவறானது என்ற கண்ணோட்டம் சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது. ஒரு சிலர் நோயின் தீவிரத்தை உணராமல், அதனை குறைத்து மதிப்பிடும் தவறை செய்கின்றனர். இக்கட்டான சூழலில் கூட, உலகம் முழுவதற்கும் இந்தியா மருந்து வினியோகித்துள்ளது. எனவே, மாநிலங்களுக்கு இடையே தடையின்றி மருந்து கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: