கடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை

வருசநாடு: கடமலைக்குண்டுவில் உள்ள ரேஷன் கடையில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு, பொருட்கள் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். மதியம் வரை பொருட்கள் வழங்கிய நிலையில், திடீரென இணையதள சேவை துண்டிக்கப்பட்டதாக கூறி ரேஷன் கடை பணியாளர்கள் பொருட்கள் வழங்குவதை நிறுத்தினர். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு, பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று ஏற்பாடு செய்து அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பணியாளர்கள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோன்று கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அடிக்கடி இணையதள சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க 2 அல்லது 3 நாட்கள் தாமதமாகி விடுகிறது. எனவே இணையதள சேவை இல்லாத கிராமங்களில் இயங்கும்  ரேஷன் கடைகளில் மாற்று வழிகள் தயார் செய்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கிராம பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சோப்பு, உப்பு, டீத்தூள், சேமியா உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி பணியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். வாங்க மறுக்கும் பொதுமக்களுடன், பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: