பாலியல், சைபர்-கிரைம், சூதாட்ட கும்பலுக்கு ஆப்பு குஜராத்தில்‘பாசா’சட்டம் அமல்

காந்திநகர்: பாலியல், சைபர்-கிரைம், சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க குஜராத்தில்‘பாசா’சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இச்சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஜராத் மாநில சட்டப் பேரவை கூட்டத்தில், சமூக விரோத தடுப்புச் சட்ட(Prevention of Anti-Social Activities-PASA-‘பாசா’)மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி பாலியல் குற்றவாளிகள், அடாவடி வட்டி வசூல் செய்பவர்கள், சைபர் குற்றவாளிகள் மற்றும் சூதாட்ட கும்பல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட நபரை ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும்.

சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட கலெக்டர் ஆகியோர் ‘பாசா’சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். இச்சட்டம் குறித்து மாநில உள்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதியதாக இயற்றப்பட்ட ‘பாசா’சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் விபரங்களை 21 நாட்களுக்குள் ஓய்வுபெற்ற மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ‘பாசா’ஆலோசனைக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் - 1985ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது புதிய வடிவில்‘பாசா’சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகள், சைபர்-கிரைம் குற்றவாளிகள், அடாவடி வட்டி வசூலிப்பவர், சூதாட்ட கும்பல் போன்றோரை இச்சட்டத்தில் கைது செய்ய முடியும்’என்றனர்.

‘பாசா’ சட்டம் ஆளுங்கட்சியால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டும் நிலையில், ‘இந்தச் சட்டத்தை மாநில அரசு தவறாகப் பயன்படுத்தாது’என்று மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா கூறினார். தமிழகத்தில் குண்டர் தடுப்பு சட்டம் உள்ளது போல், குஜராத்தில் ‘பாசா’ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: