ரூ.450 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு; மத்திய அரசு கைவிரிப்பு: ரிசர்வ் வங்கியில் நேரடியாக கடன் வாங்க புதுவை அரசு முடிவு

புதுச்சேரி: ரிசர்வ் வங்கியில் நேரடியாக கடன் வாங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும், ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலமாக கருதியே உறுப்பினராக சேர்க்கப்பட்டது. புதுச்சேரி நுகர்வோர் மாநிலம் என்பதால் ஜிஎஸ்டி அமல்படுத்தும்போதும், பெரிய அளவில் பாதிப்பு வராது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. தொடர்ந்து பலமுறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில், சாதக - பாதகங்கள் விவாதிக்கப்பட்டு பல திருத்தங்களை மாநில அரசுகள் வலியுறுத்தின. முக்கியமாக ஜிஎஸ்டி அமல்படுத்தினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பீட்டை மத்திய அரசே கொடுக்க வேண்டும். மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்த தொகையை கட்டாயம் கொடுப்பதாக உறுதியளித்தது. ஆனால் பலமுறை காலத்தோடு கொடுக்க தவறும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அணுகி கேட்கும் நிலைமை தொடர்கிறது. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக மாநிலங்களின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதோடு மத்திய அரசும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை கொடுக்காததால், புதுச்சேரி, டெல்லி போன்ற சின்னஞ்சிறிய மாநிலங்கள் நிதி பற்றாக்குறையால் தள்ளாடி வருகின்றன. அதன்படி புதுச்சேரிக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ. 450 கோடியை தர வேண்டும். மொத்தமாக மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வர வேண்டிய ரூ. 3 லட்சம் கோடியில், 70 ஆயிரம் கோடி தான் வந்திருப்பதால், ரூ. 2.30 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற சூழலில் மாநிலங்களுக்கான 11 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை தர முடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதற்கு மாற்றாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்களே நேரடியாக கடன் வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதிப்பதாக தெரிவித்தது. இதற்கான வட்டி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகைக்குள் வரவு வைக்கப்படும் என நிபந்தனை விதித்ததால் பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. வட்டியில்லாமல் மத்திய அரசு கடன் பெற்று மாநிலங்களுக்கு தர வேண்டுமென வலியுறுத்தியன.

ஆனால் இதனை மத்திய நிதியமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்காரணமாக எவ்வித முடிவையும் மாநிலங்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காத நிலையில், இதனை ஓரளவு சமாளிக்கின்றன. புதுச்சேரியில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. மாநிலத்தில் வருவாய் 40 சதவீதத்துக்கு கீழாக போய்விட்டது. அதே நேரத்தில் மத்திய அரசின் உதவியும் கிடைக்கப்பெறவில்லை. மற்றொரு பக்கம் கொரோனா பேரிடருக்கும் செலவு செய்ய வேண்டியிருப்பதால் நிதி சுழலில் சிக்கி தவிக்கிறது. பட்ஜெட்டி அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, அரசு ஊழியர்கள் சம்பளம் போடுவது என அரசின் வழக்கமான பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இதில் இருந்து மீள்வதற்கு ஆலோசனைகளை முதல்வர் நாராயணசாமி, நிதித்துறை அதிகாரிகள், தலைமை செயலர் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

நிதி நிலைமை சீராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம், எனவே இது போன்ற சூழலில் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெற்றால்தான் சமாளிக்க முடியும் என தெரிவித்துவிட்டனர். இது குறித்து நிதித்துறை தரப்பில் விசாரித்தபோது: நேரடியாக கடன் வாங்கிக்கொள்ள யூனியன் பிரதேசங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வரும் தற்போது இதனை ஏற்றுக்கொண்டு விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மத்திய அரசே கடன் வாங்கி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எங்களது தற்போதைய நிதிநிலையில், இதைவிட்டால் வேறு வழியில்லை. இந்த முடிவை தற்சமயம் எடுக்காவிட்டால், இழப்பீடு பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும் ரிசர்வ் வங்கியில் நேரடியாக கடன்பெறும் அதிக தொகைக்கு கடனை பெறமுடியாது, இதற்கு காரணம் மத்திய அரசே திரும்ப செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.

மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துவிட்ட பிறகு ஜிஎஸ்டி இழப்பீடுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தற்போதைய புதுச்சேரி நிதிநிலைமையில், இது மிகவும் ஆபத்தாக போய்விடும். எனவேதான் அரசு தனது கடன் வாங்கும் விருப்பத்தை மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டதாக முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல்வர் நாராயணசாமி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இவருடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செல்கிறார். அப்போது நிதித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.

Related Stories: