இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: மின்கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர்களுக்கு தர்ம அடி

கோவை: கோவை அருகே சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த இரு வாலிபர்களை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினா (35). நேற்று இவர் மளிகை கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் ஓடிச் சென்று, பைக்கில் தயாராக இருந்த வாலிபருடன் தப்பி செல்ல முயன்றார்.

ரத்தினா கூச்சலிட்டதால் அங்கே இருந்த நபர்கள் திரண்டனர். பைக் ஸ்டார்ட் ஆகாததால் கொள்ளையர்கள் இருவரும் மாட்டி கொண்டனர். பொதுமக்கள் அவரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். ‘‘எத்தன பொண்ணுகிட்ட தாலிய பறிச்சீங்க, உங்களால நாங்க நிம்மதியா ரோட்டுல போக முடியல. நீங்க நகை பறிச்சிட்டு போய் ஜாலியாக இருப்பீங்க, நாங்க கஷ்ட படணுமா, ’’ என கேட்டு பெண்கள் கையில் கிடைத்தவற்றை கொண்டு தாறுமாறாக தாக்கினர்.

பொதுமக்களின் அடிதாங்காமல் அவர்கள் கதறி அழுதனர். ‘அம்மா இனி திருட மாட்டோம், அக்கா மன்னிச்சுருங்க, எங்கள அடிக்காதிங்க, செத்து போயிருவோம்,’ எனக் கதறினர். zதகவலறிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த போத்தனூரை சேர்ந்தவர் அப்துல் ரகூப் (22), ரசூல் (21) ஆகியோரை மீட்டனர். இவர்கள் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பவுன் தங்க நகையை மீட்டனர்.

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை பெண்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>