ஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை

சென்னை: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவை தொகையான ரூ.4,321 கோடியை மத்திய அரசு விரைவில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 2017-18ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவை தொகையினை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டம், பீகார் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி தலைமையில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர் திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், வணிக வரி ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, “2017-18ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஐஜிஎஸ்டி) நிலுவை தொகையானது மத்திய அரசால் மாநிலங்களுக்கு இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகையில் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைந்து வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். மேலும், 2017-18ம் ஆண்டிற்கு மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பெற வேண்டிய நிலுவையாக உள்ள ஐஜிஎஸ்டி தொகையை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: