ராமேஸ்வரத்தில் இருந்து வாலாஜா வழியாக அயோத்திக்கு செல்லும் ராட்சத வெண்கலமணி

வாலாஜா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த கட்டுமான பணிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட மணி வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 5அடி உயரம், 613 கிலோ கொண்ட வெண்கலத்தால் மணி, கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டது.

பின்னர் இந்த வெண்கல மணி அயோத்திக்கு லாரியில் கொண்டு செல்லும் பணி கடந்த 17ம் தேதி தொடங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த லாரி, தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 4552 கிலோ மீட்டர் சாலையை கடந்து அக்டோபர் 7ம் தேதி அயோத்திக்கு செல்லும். வழியில் பல ஊர்களில் மக்கள் இந்த மணிக்கு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த மணியை அடித்தால் அதன் ஓசை 10 கிலோ மீட்டர் தூரம் கேட்கும். இந்நிலையில் இந்த வெண்கல மணி நேற்றிரவு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் வழியாக  வேலூரை சென்றடைந்தது.

பின்னர் இன்று வேலூரில் இருந்து ஆந்திரா வழியாக புறப்பட்டது. இந்த வெண்கல மணியுடன் தமிழக சிறப்பு போலீசார் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர். இந்த வாகனத்தை தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராஜலட்சுமி மந்தா என்பவர் ஓட்டிச்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: