ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது எப்படி?: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான நிவாரணம் வழங்குவது என்பது குறித்து பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கின. இதில் பாலியல் தொழிலும் தப்பவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: கொரோனோ காலத்தில் பாலியல் தொழில் செய்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார்கள். அவர்களுக்கு ரேஷன் அட்டை இல்லை என்றாலும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். அதைப்போன்று அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும். இது அவசர நிலையாக கருத வேண்டிய ஒன்றாகும். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

குறிப்பாக கொரோனா காலத்தில் திருநங்கைகளுக்கு எடுத்த நடவடிக்கையை போல  பாலியல் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க முடியுமா என ஆலோசித்து நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

* மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

* தேசிய ஊரடங்கு அறிவிக்கும் முன்னரே முன்னெச்சரிக்கை கருதி, தாமாகவே முன்வந்து பாலியல் தொழிலை நிறுத்தியதோடு, வாடிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

* இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பாலியல் தொழிலாளர்களின் வருமானம் கேள்விக்குறியாக இருப்பதாக கூறுகின்றனர்.

Related Stories: