வரலாற்றில் முதல் முறையாக போர்க்கப்பலின் ஹெலிகாப்டரை இயக்க உள்ள 2 பெண் அதிகாரிகள்: கொச்சி கடற்படை தளத்தில் நியமனம்

கொச்சி: இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையாக, வரலாற்றில் முதல் முறையாக போர்க்கப்பலின் ஹெலிகாப்டரை இயக்க 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையில் பல பிரிவுகளில்  பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், நீண்ட கால சேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு, தனியுரிமை இல்லாதது மற்றும் பாலினம் சார்ந்த குளியலறை கிடைப்பது உட்பட வசதிகள் என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்ய வேண்டும், ஆண்களைப் போல பெண்களும் போர்க்கப்பல்களில் சவாலான பணிகளை ஈடுபடுத்தப்பட வேண்டுமென சட்ட விதிகள் சமீபத்தில் மாற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், முதல் முறையாக போர்க்கப்பலின் ஹெலிகாப்டரை இயக்கும் பணியில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நியமனம் கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பலில் நேற்று நடந்தது. சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் போர்க்கப்பலின் ஹெலிகாப்டர் பணப்பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். நியமிக்கபட்ட இரண்டு பெண் அதிகாரிகளும்   கடற்படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களில் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எம்.எச் -60 ஆர் எதிரி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

நியமன விழாவில் அட்மிரல் ஆன்டனி ஜார்ஜ் கூறுகையில், ‘‘போர்க்கப்பலின் ஹெலிகாப்டரை இயக்க 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் போர்க்கப்பலின் முன்கள வீரர்கள் வரிசையில் அதிகளவில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

ரபேல் விமானத்தை இயக்க பெண் விமானி

இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இதற்காக சுமார் 59 ஆயிரம் கோடி மதிப்பில் பிரான்ஸூடன் ஒப்பந்தம் போட்டுள்ளது இந்தியா. அவற்றில் முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதியன்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. இந்த ரபேல் போர் விமானத்தை இயக்கவும் தற்போது பெண் விமானி நியமிக்கப்பட உள்ளார். மிக்-21 போர் விமானத்தை இயக்கி பயிற்சி பெற்ற அந்த பெண் விமானிக்கு தற்போது ரபேல் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் 36 போர்விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது இந்தியா. இவற்றில் 10 போர் விமானத்துக்கு ஒரு பெண் விமானி என்கிற அளவில் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்திய விமானப் படையில் 1,875 பெண்கள் பணியில் உள்ளனர்.

Related Stories: