வடக்கு செய்யூர் அந்தோணியார் ஆலயத்திற்கு போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கொண்டு வந்த தோமையார் சிலை: ஜெபத்தோட்ட பகுதியில் நிறுவப்பட்டது

செய்யூர்: போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தோமையார் சிலை, வடக்கு செய்யூர் ஆலய ஜெப தோட்டத்தில் நிறுவப்பட்டது.

செய்யூர் ஊராட்சி வடக்கு செய்யூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தூய அந்தோணியார் ஆலயம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பள்ளத்தில் இருந்து பாறை கண்டெடுக்கப்பட்டது. அதில்,  பாதச்சுவடுகள் மற்றும் முழங்காலிட்டு தியானத்தில் இருப்பதற்கான தடயங்கள் இருப்பது தெரிந்தது. இயைதடுத்து, அந்த  பாதச்சுவடுகள் கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பரப்புவதற்காக வந்த தோமையாரின் பாதச்சுவடுகள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

 இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் வியப்படைந்தனர். தொடர்ந்து பாதம் படிந்த பகுதியை சுற்றி தோமையார் ஜெபத்தோட்டம் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையெட்டி, இந்த ஆலயம் மற்றும் பாதம் படிந்த பாறைகளை காண தினமும்  300க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு  வந்து செல்கின்றனர். வரும் டிசம்பர் மாதம், இந்த ஆலயத்தில் 25ம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் இருந்து தோமையாரின் 3 அடி திருவுருவ சிலை, வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை, ஜெபத்தோட்ட பகுதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்டது.

அப்போது, சிறப்பு பூஜைகள் நடத்தி, புனிதப்படுத்தப்பட்ட தோமையார் சிலையை திருவீதி உலாவாக பக்தர்கள் கொண்டுவந்து ஜெப பூங்காவில் நிறுவினர். ஆலயத்தின் பங்கு தந்தை ஆண்டனி ஸ்டாலின் தலைமையில் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலிருந்து பெண்கள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் என 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தோமையாரை வழிபட்டு சென்றனர்.

Related Stories: