ஆற்றுமணல், எம்சாண்ட் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடும் பாதிப்பு: ஒரே இடத்தில் எம்சாண்ட் குவாரிகளுக்கு அனுமதி; மற்ற மாவட்டங்களை புறக்கணிக்கும் மர்மம் என்ன?

சென்னை: தமிழகத்தில் மணல் கிடைக்காததால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே இடத்தில் எம்சாண்ட் குவாரிகளுக்கு அனுமதி அளிப்பதும் மற்ற மாவட்டங்களை புறக்கணிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆற்று மணலுக்கு மாறாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து தரமான எம்சாண்ட் மணல் குவாரிகளுக்கு மதிப்பீடு சென்று வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் 216 எம்சாண்ட் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரிகளில் பெரும்பாலானவை கரூர், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தான் அமைந்துள்ளது. குறிப்பாக, கரூர், திருப்பூர், கோவையில் 25 குவாரிகளும், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தான் பெரும்பாலான குவாரிகள் உள்ளது.

இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் ஓரிரு குவாரிகள் தான் உள்ளது. இந்த குவாரிகள் மூலம் அந்த மாவட்ட பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியில் இருந்து மணல் எடுத்து வந்தால் ஆயிரக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் ஏன் எம்சாண்ட் குவாரி உரிமை தர அதிகாரிகள் முக்கியத்துவம் தராமல் குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவிலான உரிமை கொடுத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து கட்டுமான நிறுவனங்கள் கூறுகையில், தமிழகத்தில் தினமும் 45 ஆயிரம் லோடு மணல் தேவை. ஆனால், 15 ஆயிரம் லோடு கூட கிடைப்பதில்லை. 15 மணல் குவாரிகள் மூலம் 3 ஆயிரம் லோடு மணல் தான் கிடைக்கிறது. மேலும், எம்சாண்ட் மூலம் 6 ஆயிரம் லோடு மணல் தான் கிடைக்கிறது. இதனால், கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றன.

Related Stories: