அரசு உதவி, மானியம் பெறும் அமைப்புகள் பயன்படுத்தாத நிதியை ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

சென்னை: மத்திய அரசின் கீழ் உள்ள அரசு நிதியுதவி மற்றும் மானியம் பெறும் அமைப்புகள், தங்களிடம் பயன்படுத்தாமல் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து விட்டது. ஜிஎஸ்டி வசூல் குறைந்ததால், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை கூட வழங்காமல், மத்திய அரசு கைவிரித்து விட்டது. மாறாக, மாநில அரசுகள் கடன் வாங்கிக்கொள்ள யோசனை தெரிவித்துள்ளது. அதோடு, வருவாய் இழப்பீட்டை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, ரிசர்வ் வங்கியிடம் டிவிடென்ட் என சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் நிதியை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வழங்கிய நிதியுதவி மற்றும் மானியங்களின் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைக்குமாறு தற்போது வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி மற்றும் மானியம் வழங்கி வருகிறது. கடந்த நிதியாண்டில் ரூ88,320 கோடியை வழங்கியது. நடப்பு நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் ரூ87,825 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தற்போதைய நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய ஏற்கெனவே வழங்கப்பட்ட மானியங்களையும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு மத்திய அரசிடம் மானியம் மற்றும் நிதியுதவி பெற்றுள்ள நிறுவனங்களிடம், பல ஆண்டுகளாகவே செலவு செய்யப்படாமல் பல கோடி கையிருப்பில் உள்ளது. துறைகள் மற்றும் அமைச்சகங்களிடம் செலவிடப்படாமல் இருப்பில் உள்ள உபரி மானியம் மற்றும் நிதியுதவி தொகையை சிஎப்ஐக்கு அனுப்புமாறு நிதியமைச்சகம் கெடுபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மானியம் பெறும் அமைப்புகள் ஒன்றை கணக்கு துவக்கும் கட்டாய நடைமுறை கடந்த ஆகஸ்டில் கொண்டுவரப்பட்டது. இதன்படி சுமார் 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவ்வாறு கணக்கு துவக்கியுள்ளன. இதனால் செலவினங்களுக்கு ஏற்ப மட்டுமே தொகை வழங்கப்படும். மீதி தொகை அப்படியே கணக்கில் இருக்கும். மத்திய அரசின் புது உத்தரவுப்படி, இந்த கணக்குகளில் பயன்படுத்தாமல் கிடக்கும் நிதி அப்படியே இந்திய தொகுப்பு நிதியத்துக்கு (சிஎப்ஐ) சென்று விடும். ஒற்றை கணக்கு நடைமுறையில் முதல்கட்டமாக கேந்திரிய வித்யாலயா சமிதி (பட்ஜெட் நிதியுதவி ரூ4,260 கோடி), விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ரூ3,615 கோடி),

பிரசார் பாரதி (ரூ2,700 கோடி), பல்கலைக்கழக மானியக்குழு (ரூ2,310 கோடி), நவோதயா வித்யாலயா சமிதி (ரூ1,850 கோடி), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சில் (ரூ1,650 கோடி) மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (ரூ300 கோடி) கணக்கு துவக்கியுள்ளன. ரூ2.35 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது். இதன்மூலம் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ஏற்கெனவே உள்ள ரூ30.4 லட்சம் கோடியை விட அதிகரிக்கும்.

30% நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

தன்னாட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையை திரும்ப கேட்பது ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் நிதி உதவி பெறும் இத்தகைய நிறுவனங்களில் சுமார் 30 சதவீதம் தங்கள் அடையாளத்தை இழக்கலாம் எனவும், இதில் ஆய்வு நிறுவனங்களும் அடங்கும். நிதி ஆயோக் நிறுவனம், மிக குறைந்த பயன்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களை பட்டியலிட்டால், தற்போதைய சூழ்நிலையில் இவை மூடப்படும் வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சகங்களின் கீழ் உள்ள பல்வேறு தன்னாட்சி நிறுவனங்களின் பணி குறித்து குறிப்பிட்ட கால அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேவைப்பட்டால் இவற்றை மூடுவது அல்லது பிற அமைப்புகளுடன் இணைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான செலவின நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கையும் தாண்டி கடன் மேல் கடன்

கொரோனா பாதிப்பால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக ரூ4.2 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செயதுள்ளது. இதனால், பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ12 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. இதில் இதுவரை சந்தையில் இருந்து ரூ7.1 லட்சம் கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 73 சதவீதம் அதிகம். இதுபோதாது என்பதால் மேலும் நிதி திரட்டுவதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.

Related Stories: