திருமங்கைச்சேரி பகுதியில் கொள்முதல் செய்த மூட்டைகளில் நெல்மணிகள் முளைக்கும் அவலம்; விவசாயிகள் கவலை

கும்பகோணம்: திருமங்கைச்சேரி பகுதியில் கொள்முதல் செய்த மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே திருமங்கைச்சேரி நெய்குப்பை உள்ளடக்கிய ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் திருமங்கைச்சேரி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட 1,000 மூட்டை நெல்களை சாலையோரத்தில் கொட்டி வைத்து விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்தாண்டு 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், தற்போது பெய்த பருவமழையால் கூடுதலாக 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அவ்வப்போது பருவமழை பெய்து வருவதால் ஈரப்பதத்தால் நெல் மணிகள் முளைத்து வீணாகி நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. கடன் வாங்கி பயிர் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரம் வீணாகி வருகிறது. இதனால் நெல்மணிகளை ஈரப்பதம் இல்லாமல் இயந்திரத்தின் உதவியால் தூசி உள்பட எடுத்து சுத்தமாக நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அப்படி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகளில் முளைப்புதிறன் அடைந்துள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் தரமில்லாமல் உள்ளதாலும், போதுமான தார்பாய்கள் இல்லாததும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகிறது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: