கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிப்பு

மஞ்சூர்: கொரோ னா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாத தனியார் தேயிலை மற்றும் காளான் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2,700கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குபின் குணமடைந்து வீடு திரும்பினாலும் தினசரி நோய்த்தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. கட்டாய முககவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கடைகள், வனிக வளாகங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சானிடைசர், காய்ச்சல் கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காமலும், கொரோனா அச்சமின்றி அலட்சியமாக உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் கனிசுந்தரம் மற்றும் வருவாய்துறையினர் குந்தா பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டார்கள். இத்தலார் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் நுந்தளா பகுதியில் உள்ள காளான் தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு தொழிற்சாலைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: