ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: காங்கிரசை அழைக்காததால் பரபரப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 8 முக்கிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. இதில் பங்கேற்க காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குரிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போதும், நிலுவை தொகைக்கு பதிலாக ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

 இந்நிலையில், மாநிலங்களவையில் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பற்றிய விவாதம் நேற்று வந்தபோது, மத்திய அரசின் செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துப் பேசின. கூட்டம் முடிந்து வெளியே வந்த பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் போராட்டமும் நடந்தது. இதில், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 8 முக்கிய கட்சிகள் கலந்து கொண்டன. வழக்கமாக, இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காங்கிரஸ் தான் ஒருங்கிணைக்கும். மற்ற எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலோ அல்லது காங்கிரசை சிறப்பு அழைப்பாளராக கொண்டோ நடப்பது வழக்கம்.

முதன்முறையாக காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமலேயே எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை நேற்று நடத்தின. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரான டெரிக் ஓ பிரைன் அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிக்கான யுக்தியைவகுப்பதிலும், போராட்டத்துக்கான காரணத்தை முடிவு செய்வதிலும் காங்கிரசிடம் வேகம் இல்லை. நாடாளுமன்றத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவை தேடுவதற்கான வழியும் காங்கிரசிடம் இல்லை. எனவே, அக்கட்சியை போராட்டத்துக்கு அழைக்கவில்லை,’’ என்றார்.

பங்கேற்ற கட்சிகள்

திமுக, திரிணாமுல் காங்., தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடிி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா

*  நாடாளுமன்ற வளாகத்தில் 15 நிமிடங்கள் இப்போராட்டம் நடந்தது. இதில், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மனோஜ் ஷா,

சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*  தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலான பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

* திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவரான டிஆர் பாலு ‘ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்குக’ என்ற பதாகையைக் கையில் வைத்திருந்தார்.

* பிச்சை எடுக்கும் போராட்டம் போல் கைகளில் சில்வர் தட்டுகளையும் வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: