நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு என்பது கவுரவம்: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: ‘வேலைவாய்ப்பு என்பது கவுரவமாகும். இதனை எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு மறுத்து வரும்?’ என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். தற்போது, தனது தாயும் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியின் மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் அமெரிக்கா சென்றுள்ளார். எனினும், டிவிட்டரில் அரசை விமர்சித்து தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை சூழல் நிலவி வருவதால் இளைஞர்கள் இன்றைய நாளை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கவுரமாகும்.

அரசு எத்தனை காலத்துக்கு மக்களுக்கு இதை வழங்காமல் மறுத்து வரும்?’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உள்ளது. ஆனால், அரசு வேலைவாய்ப்பு தளங்களில் 1.77 லட்சம் வேலைவாய்ப்புக்கள் மட்டுமே உள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையையும் இணைத்துள்ளார். அதோடு,  மத்திய அரசின் பொருளாதாரத்தை கையாளும் முறையை விமர்சித்ததோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: