சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சில் இறக்கிவிடப்பட்ட கொரோனா நோயாளி தவிப்பு: டிரைவர், உதவியாளர் யார் என விசாரணை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 650 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், மேட்டூர் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் 45 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையில்  மேலும் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். அந்த நபர் மேற்கொண்டு எங்கு செல்வது, யாரை பார்ப்பது என தெரியாமல் 2 மணி நேரமாக சுற்றி வந்துள்ளார். இதையடுத்து அவர், தனது உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். உறவினர் வந்த பிறகு மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றால் மனஉளைச்சலில் இருந்தவருக்கு இந்த அலைக்கழிப்பு மேலும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறுகையில், ‘‘சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நோயாளிக்கு ரத்த டெஸ்ட், சிடி ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுத்த பின்புதான் வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். இவற்றை எடுக்க சில மணி நேரமாகும். அதன்படிதான் நேற்றுமுன்தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர், தன்னை அலைக்கழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொண்டு வந்து விட்டுச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் யார்? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். வார்டில் அனுமதிக்கும் வரை அவர்கள் உடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: