கொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் வந்தால் இ-பாஸ் தேவையில்லை..!! பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு கட்டாயம்; திண்டுக்கல் ஆட்சியர்

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு பைக் உள்ளிட்ட தனியார் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி  கூறியுள்ளார். அரசு பேருந்துகளில் கொடைக்கானல் வர இ-பாஸ் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் போடப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மால்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன.

ஆனால், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கொடைக்கானலில் மக்கள் இ பாஸ் உடன் வந்து சுற்றிப்பார்க்கலாம் என அண்மையில் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று, அரசு பேருந்துகளில் கொடைக்கானல் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் படிப்படியாக கொடைக்கானலில் எல்லா சுற்றுலாத்தலங்களும் திறக்கப்படும் என உதவி ஆட்சியர் அறிவித்தார்.

அதனால் கொடைக்கானல் செல்ல இபாஸ் தேவையில்லை என்ற கருத்து வெகுவாக பரவியது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்த அம்மாவட்ட ஆட்சியர், பொதுப் போக்குவரத்துகளில் கொடைக்கானலுக்கு வந்தால் மட்டுமே இபாஸ் கிடையாது என்றும் பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் வந்தால் இபாஸ் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: