நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியாத அதிமுகவுக்கு பாடம் புகட்டவேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு நடத்திய 412 பயிற்சி வகுப்புகளில் படித்த 19,355 மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிப்பெற்று 2019ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு? தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனிதாவில் தொடங்கி தற்போது ஜோதி துர்கா, ஆதித்யா, மோதிலால் வரை 16 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதற்கு யார் காரணம்? இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு. அரசியல் ரீதியான தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட படுகொலைகள், இந்த மரணங்களுக்கு அதிமுக அரசுதான் முதல் குற்றவாளி.

அதிமுக அரசால் நீட் தேர்வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வில் பங்கேற்கிற மாணவர்களையும் அதில் வெற்றிப்பெறுகிற வகையில் பயிற்சி வகுப்புகளின் மூலம் தயார்படுத்தவும் முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைத்து, சீர்குலைத்து படுகுழியில் தள்ளிய தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். இவர்கள் செய்த குற்றத்திற்காக தமிழக மக்கள் அதிமுக அரசை மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: