கோவை அருகே இன்று யானை தாக்கி மூதாட்டி பலி: பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

பெ.நா.பாளையம்: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், இறந்து விட்டார். இவரது மனைவி நீலாவதி (73). இவர், தினமும் அதிகாலையில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவது வழக்கம். இன்று பூப்பறித்து வீடு திரும்பும்போது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை, அவரை வழிமறித்து தூக்கி வீசியது. இதில், நீலாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ந்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள், காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சிவா, தடாகம் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் சரவணக்குமார், கவுன்சிலர் நாகராஜ், திமுக ஒன்றிய பொறுப்பாளர் சி.எம்.குமார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம், ரங்கநாதன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ளஅகழியை அகலப்படுத்தி, யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பலியான மூதாட்டியின் உடலை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: