மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!!!

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள  சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறாமல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர்  அரங்கத்தின் 3வது மாடியில் தமிழக சட்டப்பேரவை  கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. முதல் நாளான நேற்று 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது. மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை  இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உரையாற்றினர்.

இதற்கிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 500 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு  கிடைக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட்  தேர்வில் வெற்றிபெறுவோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10% பரிந்துரை:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சினர்  வலியுறுத்தி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பை  வெளியிட்டார். மேலும், இடஒதுக்கீடு பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு.  நீட் தேர்ச்சி பெற்ற அரசு  பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க  தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

Related Stories: