மலையாள நடிகையை கடத்தி பலாத்காரம்: சாட்சியை கலைக்க நடிகர் திலீப் முயற்சி? ஜாமீனை ரத்து செய்ய அரசு வக்கீல் மனுதாக்கல்

திருவனந்தபுரம்: பிரபல  மலையாள நடிகையை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், சாட்சியை கலைக்க  முயன்றதால் நடிகர் திலீபின்  ஜாமீன் ரத்து செய்யப்படலாம் என்ற பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காரில் கடத்தி பலாத்காரம்  செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகையின்  முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் நடிகர்  திலீபுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  போலீசார் திலீபை கைது செய்தனர். 85 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில்   விடுதலையானார். இது தொடர்பான வழக்கு முதலில் ஆலுவா மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்திலும், பிறகு எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்திலும்  நடந்தது.

இந்த  வழக்கை பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று,  பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார். மனுவை  விசாரித்த நீதிமன்றம், ஹனிவர்க்கீஸ் என்ற பெண் நீதிபதி விசாரிக்க  உத்தரவிட்டது. இதையடுத்து நடிகை  பலாத்கார வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில்  நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது தனக்கும், பல்சர் சுனிலுக்கும் எந்த தொடர்பும்  இல்லை என்று திலீப் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் 2 பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், அதற்கு ஆதாரங்கள், சாட்சி   உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்  சாட்சியை வெறோரு வக்கீல் மூலம் நடிகர் திலீப் தொடர்பு கொண்டு,  நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது என்று  நிர்ப்பந்தித்ததாக  போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திலீபின் ஜாமீனை ரத்துசெய்ய  அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார். மனுவை  விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க, சாட்சியத்தை கலைக்க  முயன்ற வக்கீலுக்கு நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. அவர் தரப்பு விளக்கத்தை கேட்ட  பிறகு திலீபின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு  செய்யும்.

Related Stories: