சீன அரசு கூறுவதுபோல் கசாப்பு கடையில் அல்ல... கொரோனா உருவான இடம் வூஹான் ஆய்வகம்: அமெரிக்காவில் சீன வைராலஜிஸ்ட் பகீர் பேட்டி

நியூயார்க்: கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து உருவானதாக அமெரிக்காவில் உள்ள சீன வைராலஜிஸ்ட் பகீர் பேட்டி அளித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 9 மாதங்களாக உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை உரிய நேரத்தில் உலக நாடுகளிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா, வூஹான் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறிவருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், கொரோனா உருவான விஷயம் குறித்து புதுபுது தகவல்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங்-யான் அமெரிக்காவில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தயாரிக்கப்பட்டது. இதற்கான அறிவியல் சான்றுகள் என்னிடம் உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிகாரிகளிடம் எச்சரித்தபோது, அதனை ​​அவர்கள் கேட்கவில்லை. சீன அரசு தொடர்ந்து மவுனமாக இருந்ததால் கடந்தாண்டு ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தேன். இந்த வைரஸ் இயற்கையானது அல்ல. மரபணு வரிசையில் மனித கைரேகை போன்றது.

இதன் அடிப்படையில் வைரசை அடையாளம் காணமுடியும். சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து எப்படி வந்தது? ஏன் அதனை உருவாக்கினார்கள் என்று மக்களுக்குச் சொல்வேன். உயிரியலில் அறிவு இல்லாதவர்கள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும். வூஹான் ஆய்வகத்தில் நிமோனியா ஆய்வின் போது தான் கொரோனா வைரஸ் பற்றி அறிந்தேன். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் பதிலளிக்கவில்லை. வூஹானில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியது என்று சீன அரசாங்கம் கூறுவது முற்றிலும் தவறானது’ என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவும், சீன ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், இவற்றை உலக சுகாதார அமைப்பு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: