தனது கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநரை சந்தித்து நடிகை கங்கனா புகார்; தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக பேட்டி

மும்பை: நடிகை கங்கனா ரனவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினர். பாலிவுட்  நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் ஒட்டுமொத்த  பாலிவுட்டையும், மகாராஷ்டிரா அரசையும் கங்கனா ரனவத் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் கங்கனா கால் வைக்க கூடாது என சிவசேனா தலைவர்கள் எச்சரித்தனர். ‘9ம் தேதி மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பார்’ என கங்கனா சவால் விட்டார். இதையடுத்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதுவரை எந்த நடிகர், நடிகைக்கும் வழங்கப்படாத அளவுக்கு 11 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கங்கனாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் அறிவித்தபடி கடந்த 9-ம் தேதி காலை மும்பை வருவதற்காக  இமாச்சல் பிரதேசத்தின் மினாலியில் இருந்து புறப்பட்டார். பின்னர்  இமாச்சல் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வழிபட்டு விட்டு, மும்பைக்கு புறப்பட்டார். அப்போது மும்பையில் அவரது அலுவலகம்  உள்ள பகுதியில் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குவிந்திருந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அடுத்த சில  நிமிடங்களில் அவரது அலுவலகம் விதிமீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி, அதன்  ஒருபகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் குழு இடித்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கங்கனா மும்பை வந்ததும், விமான நிலையத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கங்கனா சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கங்கனாவின் அலுவலகத்தை இடிக்க தடை விதித்தது. இது தொடர்பாக மும்பை மாநகராட்சி பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நடிகை கங்கனா முதல்வர் தாக்கரேயை அவரது டுவிட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் மோதல் மேலும் முற்றியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கங்கனா ரனவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினர்.

கவர்னர் சந்திப்புக்கு பின் கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு நடந்த அநியாத்தை பற்றி கவர்னரிடம் விளக்கி கூறினேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.  கவர்னர் தனது சொந்த மகளைப் போலவே எனது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

Related Stories: