சீனாவும், உலக சுகாதார அமைப்பும் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது: ஐநா பொதுச்சபையில் கண்டன தீர்மானம்

நியூயார்க்: ‘கொரோனா வைரஸ் பரவல் பற்றி உலக நாடுகளுக்கு சீனாவும், உலக சுகாதார அமைப்பும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், உலகளவில் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது’ என்று ஐநா பொதுச்சபையில் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரசால், தற்போது உலகளவில் 2.83 கோடி பேர் பாதித்தும், 9 லட்சம் பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உலக நாடுகளின் பொருளாதாரம் பல லட்சம் கோடி பாதித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகளாகும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், உலகளாவிய சவாலாக உருவாகியுள்ள கொரோனா தொற்றை எதிர்த்து போரிட உறுப்பினர் நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. பலதரப்பட்ட ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பின் மூலம் இதனை எதிர்கொள்ள ஐநா பொதுசபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பில் இருந்த போதிலும், இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இது தொடர்பாக ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி கே. நாகராஜ் நாயுடு நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `ஐநா பொதுச்சபையில், உலகளாவிய மிகப் பெரிய சவால்களின் ஒன்றாக கொரோனாவை அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. உலக நாடுகள் இந்த சவாலை ஒருங்கிணைதல், ஒற்றுமை மற்றும் பன்முக ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

*  சீனாவின் வுகானில் இருந்து பரவ தொடங்கிய வைரஸ் பற்றி அந்நாடு பொறுப்புடன் எச்சரித்திருந்தால், எதிர்பாரத விதமாக தற்போது உலக நாடுகள் கொரோனாவால் இந்தளவு பாதிப்பதை தடுத்திருக்க முடியும்.

* சீனா மட்டுமல்ல, உலக சுகாதார அமைப்பும் இந்நோய் தொற்று குறித்து முன்கூட்டியே தெரிவிக்க தவறிவிட்டது. இல்லையென்றால், இந்தளவுக்கு மோசமாக பாதிக்கப்படும் சூழல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

* கொரோனாவை எதிர்த்து போரிடுவதில், அனைத்து மட்டத்திலும் சர்வதேச ஒத்துழைப்பு, பன்முகத்தன்மை, ஒற்றுமையுடன் செயல்படுவது மீண்டும் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

* கொரோனாவுக்கு எதிரான தீவிர நோய் தடுப்பு மருந்து கிடைக்க செய்வதன் மூலம் இந்த தொற்றை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

* ஐநா.வில் இந்தியா உட்பட 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

* இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்பட 169 நாடுகள் வாக்களித்தன.

* அமெரிக்காவும், இஸ்‌ரேலும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன

* உக்ரைன், ஹங்கேரி ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

Related Stories: