மூணாறில் தேயிலை தோட்டம் வாங்கி குவிக்க கேரள சினிமா பிரபலங்களுக்கு உதவிய போதை கடத்தல் கும்பல்: விரைவில் கிடுக்கிப்பிடி விசாரணை

திருவனந்தபுரம்: போதைப்பொருள்  கடத்தல் கும்பல் உதவியுடன் மலையாள சினிமாவை சேர்ந்த சிலர்  மூணாறில் ₹50  கோடி மதிப்பில் தேயிலை தோட்டங்களை வாங்கியதாக தகவல் வெளியாகி  உள்ளது. பெங்களூருவில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்  பிடிபட்டது.  இதில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரள மாநிலம் திருச்சூரை  சேர்ந்த முகமது  அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என 3 பேர் கைது  செய்யப்பட்டனர்.  இவர்களில் முகமது அனூபுக்கு, கேரள  மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ்  கோடியேரிக்கும்  தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதேபோல்,  பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் மலையாள சினிமாத்துறையை  சேர்ந்தவர்களுடன் தொடர்பு  இருப்பதும் தெரியவந்துள்ளது. மலையாள சினிமாவை  சேர்ந்த 8 பேர் அடிக்கடி  முகமது அனூபிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி  வந்துள்ளனர். முகமது அனூபின் செல்போனை பரிசோதித்தபோது  இந்த விபரங்கள்  வெளிவந்துள்ளன.

இதற்கிடையே, முகமது அனூபுடன் தொடர்பு  வைத்துள்ள  மலையாள சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மூணாறில் ₹50 கோடி  மதிப்பில் தேயிலை  தோட்டங்களை வாங்கியுள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.  இது குறித்து  கேரள போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். தற்போது  பெங்களூருவில்  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ள கன்னட   சினிமாத் துறையினரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து   வருகிறது. இது முடிந்த பிறகு மலையாள சினிமாத் துறையினரிடம் விசாரணை   நடத்தப்படும் எனவும் தெரிகிறது.

Related Stories: