கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக கோவை நகைக்கடை உரிமையாளரிடம் 3ம் நாள் விசாரணை!: பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்

எர்ணாகுளம்:  கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்பாக கோவை நகைப்பட்டறை உரிமையாளர் நந்தகுமாரிடம் 3-வது நாளாக கொச்சியில் விசாரணை நடைபெற்று வருகிறது. கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக கோவை நகைப்பட்டறை உரிமையாளர் நந்தகுமார் வீட்டில் விசாரணையானது நடைபெற்று வந்தது. தற்போது, கேரள தங்கக்கடத்தல் வழக்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகை கடத்தல் மற்றும் விற்பனையில், தங்கராணி ஸ்வப்னா கும்பலுக்கும், கோவை நகைக்கடை உரிமையாளர் நந்தகுமாருக்கும் தொடர்பு இருக்கிறதா என என்.ஐ.ஏ., அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை - கேரளா என நந்தகுமாரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அவரிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து 3வது நாளாக தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணையில் தேசிய முகமை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் தங்க நகை கடத்தலில் கோவையை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், என்.ஐ.ஏ., அதிகாரிகள் பல இடங்களில் சோதனையிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: