உடல் நலம் குன்றிய குழந்தைகளின் சார்பாக பள்ளி செல்லும் AV 1 ரோபோ: நார்வே ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு..!!

லண்டன்: உடல் நலம் குன்றி பள்ளிகளுக்கோ, கல்வி சுற்றுலாவுக்கோ செல்ல முடியாத குழந்தைகளுக்கு அவர்கள் சார்பில் சென்று வீடியோ எடுத்து அனுப்பி ரோபோ ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. AV 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இணையவசதி கொண்ட இந்த ரோபோ, ஆடியோ, வீடியோ இரண்டையும் பதிவு செய்யும் வசதி கொண்டது. காட்சிகளை உடனுக்குடன் நேரடியாக பார்க்க முடியும் என்பது ரோபோவின் தனித்துவம். உடல் நலம் பாதித்த குழந்தைகளுக்காக பள்ளிக்கூடத்துக்கும், உயிரியல் பூங்காக்களுக்கும் செல்லும் ரோபோ, வெளியுலகத்துடன் அவர்களுக்கு ஒரு பாலமாக இருக்கிறது. ரோபோவின் சிறப்பம்சம் குறித்து உடல் நலம் பாதித்த குழந்தையின் பெற்றோர் ஒருவர் தெரிவித்ததாவது, ரோபோவால் ஃபினிலின் வாழ்க்கை மாறியிருக்கிறது.

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும்  ஃபினிலினால் கவனிக்க முடிகிறது. பள்ளிகள் சார்பில் அழைத்து செல்லும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ரோபோவும் செல்கிறது.  ஃபினிலின் வகுப்பு தோழர்கள் ரோபோவுக்கு ஸ்டார் வார்ஸ் டி - ஷர்ட் அணிவித்து, ஸ்டார் வார்ஸ் படத்திற்கு அழைத்து சென்றனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார். நோயால் பாதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. யாருக்கும் தனிமை இல்லை என்ற அமைப்பு இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற டெலி பிரசன்ஸ் ரோபோக்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Related Stories: