5 மாதங்களுக்குப் பின் இயல்புக்கு திரும்பிய கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளுக்கு பூங்கொத்துடன் வரவேற்பு: இ-பாஸ் இல்லாதவர்கள் வெளியேற்றம்

கொடைக்கானல்: கொரோனா பரவலால், தமிழக அரசு உத்தரவுப்படி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள்  அனுமதிக்கப்படவில்லை. இந்த தடையால், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள்  செல்ல தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்ததுடன், பல ஆயிரம் கோடி வருவாய்  இழப்பும் ஏற்பட்டது.செப். 1க்கு பிறகு ஊரடங்கில் அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொடைக்கானலுக்கு நேற்று முதல் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ்  பெற்று வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களது அடையாள ஆவணங்களில் ஏதாவது  ஒன்றை காண்பித்து கொடைக்கானலுக்கு வரலாம். வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமென  அறிவிக்கப்பட்டிருந்தது.

தடை நீங்கினாலும் கொடைக்கானலுக்கு நேற்று 100க்கும் குறைவான சுற்றுலாப்பயணிகளே வருகை தந்தனர். முதற்கட்டமாக பிரையண்ட் பூங்கா,  ரோஜா தோட்டம், செட்டியார் பூங்காக்கள் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டிருந்தன. பூங்கா நிர்வாகத்தினர் சுற்றுலா பயணிகளுக்கு  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  அவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்தும், சானிடைசர் கைகளில் தெளித்தும், செல்போன் எண்ணை பதிவு செய்தும் பூங்காவிற்கு உள்ளே  அனுமதிக்கப்பட்டனர்.

 2 மணிநேரத்திற்கு ஒரு முறை 200 பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளதாக பூங்கா நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. கொடைக்கானலில் நேற்று காலை  சுமார் ஒரு மணிநேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பூங்காக்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதற்கிடையே நேற்று  கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெறாமல் பேருந்துகளில் வந்த சில சுற்றுலாப்பயணிகளை நகருக்குள் அனுமதிக்கவில்லை. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே  திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related Stories: