புளியந்தோப்பில் பழிக்குப்பழி வாங்க ரவுடியை கொன்றோம்: கைதான 8 பேர் வாக்குமூலம்

பெரம்பூர்: புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (எ) நாய் ரமேஷ் (34). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவி மற்றும் அனுஷியா, ஷாம் என்ற மகள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் 5வது தெரு வழியாக ரமேஷ் நடந்து வந்தபோது, 2 பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரமேஷை வழிமறித்து ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ரமேஷ் பாபு சில வருடங்களுக்கு முன்பு புழல் காவாங்கரை பகுதியில் வசித்து வந்தபோது, கடந்த 2016ம் ஆண்டு காவாங்கரை டாஸ்மாக் பாரில் ரவுடி சிவராஜ் என்பவரை கொலை செய்தார்.  தொடர்ந்து, பேசின் பிரிட்ஜ் பகுதியில் கஞ்சா விற்பனையும் செய்து வந்தார். மேலும், இவர் மீது 3 கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் நேற்று மாலை செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் பேசின்பிரிட்ஜ் போலீசார் அவர்களை தங்களது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதில், 2016ம் ஆண்டு காவாங்கரை பகுதியை சேர்ந்த சிவராஜை, ரமேஷ் வெட்டிக்கொலை செய்தார். இதற்கு பழி தீர்க்கவே சிவராஜின் நெருங்கிய நண்பரான விஜி அவரது அடியாட்களான சரத்குமார் (30), சூர்யா (26), ராகேஷ் குமார் (25), சத்யா (24), சங்கர் (40), அபினேஷ் (24), விக்னேஷ்குமார் (26) ஆகிய ஏழு பேருடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, அவர்களிடமிருந்து 5 பெரிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2 வாரங்களில் ஓட்டேரியில் 2 கொலையும், தற்போது பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு கொலையும் நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: